வாக்குத்தத்த செய்தி

31-07-2018

கிரியைகளுக்கு பலன் உண்டு

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்!. இந்த வருடத்தின் பாதியை கடந்து வர தேவன் கிருபை பாராட்டினார். கடந்த 7 மாதங்களில் உங்கள் வாழ்வில் தேவன் செய்த நன்மைகளுக்காக நன்றியுள்ளவர்களாக இருங்கள். விசேஷமாக இந்த மாதம் தேவன் உங்கள் கிரியைகளுக்குத்தக்க பலனை தருவார். அன்பின் பிரயாசங்களை மறந்து விடுவதற்கு அவர் அநீதியுள்ளவரல்லவே.

1. நன்மை செய்யுங்கள்:-

நாம் எதை விதைக்கிறோமா அதையே அறுக்க வேண்டும் . ஆகவே உங்களுக்கு நன்மை உண்டாக வேண்டுமானால் நன்மை மட்டும் செய்ய தீர்மானியுங்கள். உங்களுக்கு தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்யுங்கள்அது தேவனுடைய பார்வையில் விசேஷமானது. தேவன் காயினிடம் நன்மை செய்தால் மேன்மை இல்லையா? என் கூறினார். இயேசு நமக்கு முன் மாதிரியாக அவர் இந்த உலகில் மனிதனாக வாழ்ந்த காலங்களில் நன்மை செய்கிறவராக சுற்றி திரிந்தார். கடந்த காலங்களில் நீங்கள் செய்த நன்மைக்கு இன்னும் பலன் கிடைக்காமல் இருக்கிறதா? இந்த மாதம் சேர்த்து தருவார்.

2. பழி வாங்குதல் கர்த்தருகிரியது:-

ஒரு வேளை சிலர் உங்களுக்கு பல பிரச்சனைகளை  கொடுத்து கொண்டே இருக்கலாம், மிகவும் உங்களை வேதனைபடுத்தலாம் , ஆனாலும் அவசரப்பட்டு விடாதீர்கள். அவர்களுக்கு விரோதமாக எந்த ஒன்றும் செய்து விடாதீர்கள். தேவன் எல்லாவற்றையும்  கவனித்து கொண்டே இருக்கிறார். பழி வாங்குதல்   எனக்குரியது நானே பதில் செய்வேன் என்று தேவன் உறுதிப்பட தெரிவித்துள்ளார். நீங்கள் அவர்களுக்கு விரோதமாக ஏதேனும் செய்து விட்டால் தேவன் செயல்படமாட்டார். தேவன் உங்களுக்காக கிரியை செய்ய இடம் கொடுங்கள்.

3. தாமதமும் நன்மைக்கே:-

சில நேரங்களில் நீங்கள் செய்த நன்மைக்குரிய பலன் உடனே கிடைக்காமல் போகலாம். தேவன் மறந்து விட்டாரா என கலங்காதிருங்கள். ஓரு போதும் தேவன் மறக்க மாட்டார். மொர்தெகாய் அகாஸ்வேருவின் உயிரை காப்பாற்றினார். ஆனால் உடனே எந்த நன்மையும் அவனுக்கு கிடைக்கவில்லை. ஆனால் ஏற்ற சமயத்தில் தேவன் அவனுக்கு பதில் செய்தார். அதே போல யோசேப்பு பான பாத்திரக்காரனுக்கு செய்த நம்மையை அவன் மறந்து விட்டான். ஆனால் ஏற்ற நேரங்களில் தேவன் அதை அவனுக்கு நினைவுபடுத்தி யோசேப்புக்கு நன்மை செய்தார். நிச்சயமாக உன் கிரியைகளுக்கு நல்ல பலன் உண்டு.